ஓட்டுப்போட சிங்கப்பூரிலிருந்து வந்த குடும்பம்.. லிஸ்ட்டில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி... விஜய் தொகுதியில் சோகம்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று ஏப்ரல் 23 கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை பெரம்பூரில் ஒரு குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அனுபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தாலும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியே தீர வேண்டும் என்ற ஆர்வத்தில், சிங்கப்பூரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இன்று காலை சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் இருந்து நேராக வாக்குச்சாவடிக்குச் சென்ற அவர்களுக்கு, அங்கு காத்திருந்த அதிர்ச்சி அவர்கள் அனைவரையும் நிலைகுலையச் செய்தது.

வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் அந்த 3 பேரின் பெயர்களும் விடுபட்டிருந்ததைக் கண்டு அவர்கள் மிகுந்த வேதனையடைந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, தாங்கள் முறையாக விண்ணப்பித்துப் பெயர்களைச் சேர்த்திருந்ததாக அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும், கடைசி நேரத்தில் தங்களது பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

சுமார் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து, பெரும் பொருட்செலவில் ஓட்டுப்போட வந்த தங்களுக்கு உரிய வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகத் துரோகம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் தங்கள் வாக்குரிமை பறிபோய்விட்டதாக அந்த குடும்பத்தினர் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட தூரம் பயணம் செய்து வந்தும் வாக்களிக்க முடியாமல் போன அந்த குடும்பத்தின் ஏமாற்றம், அங்கிருந்த மற்ற வாக்காளர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.