பெண் போலீசைக் காதலித்து குடும்பம் நடத்திவிட்டு, சாதியைக் காரணம் காட்டி ஏமாற்றிய சக போலீஸ்காரர் கைது!
சென்னையில் சக பெண் காவலரைக் காதலித்து, கணவன்-மனைவி போல ஒன்றாகக் குடும்பம் நடத்திவிட்டு, பின்னர் சாதியைக் காரணம் காட்டித் திருமணம் செய்ய மறுத்த புகாரில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை போலீஸ்காரர் அஜய் ஆகாஷ் (26) கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் ஆகாஷ் (26), திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்தார். இவர் மீது சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணிபுரியும் அறந்தாங்கியைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர், கடந்த ஜூன் மாதம் எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த புகார் மனுவில், “புதுக்கோட்டையில் குத்துச்சண்டைப் பயிற்சியின் போது நாங்கள் இருவரும் அறிமுகமாகி 2019-ஆம் ஆண்டு முதல் உயிருக்கு உயிராகக் காதலித்து வந்தோம். நான் 2020-ம் ஆண்டிலும், அஜய் 2022-ம் ஆண்டிலும் காவல்துறையில் சேர்ந்தோம். 2025-ஆம் ஆண்டில் சுமார் 9 மாதங்கள் நான் வசிக்கும் சென்னை நரியங்காடு வீட்டில் இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். என் வீட்டில் திருமணத்திற்கு சம்மதித்த நிலையில், அஜய் வீட்டில் எனது சாதியைக் காரணம் காட்டி எங்களது திருமணத்துக்கு மறுத்தனர். குடும்பத்தினர் பேச்சைக் கேட்டு மனம் மாறிய அஜய், வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார்” எனத் தெரிவித்திருந்தார்.
பெண் போலீஸ் அளித்த புகாரின் பேரில் எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அஜய் ஆகாஷ் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து தலைமறைவான அவர், நேற்று முன்தினம் சென்னை நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் நேரில் ஆஜரான பெண் போலீஸ், தன்னைக் காதலித்து ஏமாற்றியது குறித்து நீதிபதியிடம் உருக்கமாக முறையிட்டார். இதனைக் கேட்ட நீதிபதி, போலீஸ்காரர் அஜய் ஆகாஷைக் கைது செய்யுமாறு எழும்பூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அஜய் ஆகாஷ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.