கார் மீது சரக்கு லாரி கவிழ்ந்து கோர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

 

டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்த கோர விபத்தில், கோயிலுக்குச் சென்று திரும்பிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரேவாரி மாவட்டத்தில் உள்ள பவால் நகரின் பானிபூர் சவுக் பகுதியருகே டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டெல்லி சுபாஷ் நகரைச் சேர்ந்த குடும்பத்தினர் ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற கது ஷியாம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் டெல்லி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த தீபக் குமார் (29), அவரது மனைவி திவ்யா (28), தீபக்கின் சகோதரி சரிதா மற்றும் உறவினர் நிதின் (40) ஆகிய 4 பேரும் இடிபாடுகளில் சிக்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரில் அவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த 5 வயதுச் சிறுவன் மட்டும் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான். விபத்து குறித்துத் தகவல் அறிந்த போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.