ட்ரம்ப் உருவம் பொறித்த தங்க நாணயம்.. அமெரிக்காவில் புதிய சர்ச்சை!

 

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிபர் டொனால்டு டிரம்பின் உருவம் பதித்த 24 கேரட் தங்க நாணயத்தை வெளியிட அமெரிக்காவின் நுண்கலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது அந்நாட்டில் புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. 

அமெரிக்க வரலாற்றில் மிக அரிதாகவே உயிருடன் இருக்கும் அதிபர்களின் உருவம் நாணயங்களில் இடம்பெறும். அந்த வரிசையில் தற்போது டொனால்டு டிரம்ப் இடம் பெறவிருப்பது அந்நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் டிரம்ப் ஒரு மேசை மீது தனது இரு கைகளையும் ஊன்றி, தீவிரமான தோற்றத்துடன் நிற்கும் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் மேலே "LIBERTY" என்ற சொல்லும், கீழே "1776–2026" என்ற ஆண்டுகளும் இடம் பெற்றுள்ளன. நாணயத்தின் பின்பக்கம் அமெரிக்காவின் தேசியச் சின்னமான 'பாலட் ஈகிள்' கழுகு பறப்பது போன்ற படம் உள்ளது. இது 24 கேரட் சுத்த தங்கத்தால் ஆன நினைவு நாணயமாக இருக்கும். இதன் அளவு சுமார் 3 அங்குலம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் அதிபர்கள் அல்லது பொதுப் பிரமுகர்களின் உருவத்தைச் செலாவணி நாணயங்களில் பொறிக்கக் கூடாது என்ற சட்டப்பூர்வமான மரபு உள்ளது. இதற்கு முன் 1926-ல் அதிபர் கால்வின் கூலிட்ஜ் உருவம் மட்டும் அவர் உயிருடன் இருந்த போது ஒரு நினைவு நாணயத்தில் இடம் பெற்றிருந்தது. அமெரிக்க பெடரல் சட்டம் உயிருடன் இருப்பவர்களை நாணயங்களில் சித்தரிப்பதைத் தடை செய்கிறது. ஆனால், இது பொதுப் பயன்பாட்டிற்கான நாணயம் அல்ல, ஒரு 'நினைவுப் பொருள்' என்பதால் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என அரசுத் தரப்பு வாதிடுகிறது.

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சில வரலாற்றாய்வாளர்கள் இந்த முடிவை விமர்சித்துள்ளனர். "மன்னர்களும் சர்வாதிகாரிகளுமே தங்கள் உருவத்தை நாணயங்களில் பொறிப்பார்கள். இது ஒரு ஜனநாயக நாட்டின் மதிப்புகளுக்கு எதிரானது" என்று செனட்டர் ஜெஃப் மெர்க்லி போன்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கப் பொருளாளர் பிராண்டன் பீச் கூறுகையில், "நாட்டின் 250-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், தற்போதைய அதிபரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் நமது நாட்டின் துடிப்பான உணர்வைப் பிரதிபலிக்கும்" எனத் தெரிவித்துள்ளார். இந்த நாணயம் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட உள்ளது.