சென்னையில் தறிகெட்டு ஓடிய அரசுப் பேருந்து... 10-க்கும் மேற்பட்ட கார்கள் மீது மோதி விபத்து!
சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள முக்கியச் சாலையில் மாநகரப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கார்கள் மீது அடுத்தடுத்து மோதிப் பெரும் விபத்துக்குள்ளானது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து பயணிகளைச் ஏற்றிக்கொண்டு தீவுத்திடல் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்து, என்.எஸ்.சி. போஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரேக் பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநர் ராமமூர்த்தியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் கார்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் மீது கொடூரமாக மோதியது.
மோதிய வேகத்தில் பல கார்களின் முன்பகுதிகள் முற்றிலும் நொறுங்கின. தொடர்ந்து சென்ற பேருந்து, சாலையின் நடுவே இருந்த மையத் தடுப்புச்சுவர் மீது ஏறி நின்றது. இந்த விபத்தின் போது பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்தனர். எனினும், அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் மற்றும் பாதசாரிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த பூக்கடைப் போக்குவரத்து போலிஸார், போர் நினைவுச் சின்னம் அருகே தடுப்புகளை அமைத்து வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர்.
கிரேன் மூலம் சேதமடைந்த கார்கள் மற்றும் பேருந்தை அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து சீரானது. பேருந்தின் பிரேக் உண்மையிலேயே பழுதடைந்ததா அல்லது முறையான பராமரிப்பு இல்லையா என்பது குறித்து ஓட்டுநர் ராமமூர்த்தி மற்றும் நடத்துநர் தேவராஜிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.