அரசு பேருந்து ஓட்டுநரை தலையில் வெட்டிய தவெக பிரமுகர்... மதுரையில் பரபரப்பு!
மதுரை சோழவந்தானில் சாலையின் நடுவே காரை நிறுத்தியதைத் தட்டிக்கேட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரை, தவெக பிரமுகர் உள்ளிட்ட கும்பல் கத்தியால் தலையில் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்துப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் விடிய விடிய உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை சோழவந்தான் பகுதியில் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள பிரதான சாலையின் நடுவே கார் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்தை இயக்க முடியாமல் போனதால், அரசுப் பேருந்தின் ஓட்டுநரான பிரசாத் என்பவர் காரை எடுக்குமாறு அங்கிருந்தவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தவெக பிரமுகரான தனுஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓட்டுநர் பிரசாத்துடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அக்கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓட்டுநர் பிரசாத்தின் தலையில் பயங்கரமாக வெட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் பிரசாத் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசுப் பேருந்து ஓட்டுநர் பணி நேரத்தில் தாக்கப்பட்ட செய்தி அறிந்ததும் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் கொதித்தெழுந்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்து, 250-க்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரசுப் பேருந்து போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓட்டுநரை வெட்டிய தவெக பிரமுகர் தனுஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனத் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்யாவிட்டால், தங்களது போராட்டம் மாநிலம் தழுவிய அளவில் மீண்டும் தீவிரமாக வெடிக்கும் எனப் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.