மும்பையில் பூங்காவில் நடந்து சென்ற இளம் தம்பதி மீது சிறுவர்கள் கும்பல் கொடூர தாக்குதல்... அதிர்ச்சி வீடியோ!
மும்பையில் உள்ள ஃபீனிக்ஸ் மால் அருகிலுள்ள பூங்கா ஒன்றில் அமைதியாக நடந்து சென்ற இளம் தம்பதி மீது, சிறுவர்கள் கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்குதல் நடத்திய காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித முன்னறிவிப்புமின்றி வந்த அந்தச் சிறுவர்கள் கும்பல், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு அந்தத் தம்பதியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது.
மேலும், அந்த இளம் தம்பதியைத் தாக்கிப் பூங்காவை விட்டு வெளியே விரட்டியடிக்கும் பதைபதைக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. பட்டப்பகலில் பொது இடத்தில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது.
இந்த அதிர்ச்சி வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையினர் உடனடியாகக் களமிறங்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 8 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.