நெஞ்சை உலுக்கும் சோகம்... தந்தை உயிரிழந்த அதே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து பிளஸ் 2 மாணவி தற்கொலை!
தந்தையின் இழப்பைத் தாங்க முடியாத மனவேதனையில் இருந்த 16 வயது பிளஸ் 2 மாணவி, தனது தந்தை ரயிலில் அடிபட்டு உயிரிழந்த அதே இடத்தில் விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (39). எந்திர பிட்டராகப் பணியாற்றி வந்த இவரது மனைவி ஜானகி (37), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சாதனா (16), தனது தாய் பணியாற்றி வந்த அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
வீட்டிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்ல தினமும் ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டும் என்பதால், கார்த்திக் தனது மகளைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று பள்ளியில் விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி சாதனாவை பள்ளியில் விட்டுவிட்டுத் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக ரயிலில் அடிபட்டு கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது தந்தை மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த சாதனா, அவரது அகால மரணத்திற்குப் பிறகு மிகுந்த மனச்சோர்வுடன் காணப்பட்டுள்ளார். பள்ளியில் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் தனது தந்தையைப் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருந்த அவர், "எனது அப்பா இல்லாத இந்த உலகத்தில் என்னால் வாழ முடியவில்லை" என அடிக்கடி கூறி வேதனைப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சாதனா, தனது தந்தை உயிரிழந்த அதே தண்டவாளப் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலின் முன் திடீரெனப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கண் இமைக்கும் நேரத்தில் ரயில் மோதியதில் சாதனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் ரயில்வே காவல்துறையினர், மாணவி சாதனாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மாணவியின் உடல் நேற்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஏற்கனவே கணவரை இழந்து தவித்து வந்த ஆசிரியை ஜானகி, தற்போது ஒரே மகளையும் பறிகொடுத்துத் தவிப்பது அப்பகுதி மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம், துக்கம் அல்லது தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடத் தமிழக அரசின் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணி நேரமும் செயல்படும்) சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 - 24640050