கூடலூரில் நடுரோட்டில் கரும்புகளை ருசித்தபடி உலா வந்த ஒற்றைக் காட்டு யானை!
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து, வீட்டின் தோட்டத்திலிருந்த கரும்புகளைப் பிடுங்கித் தின்றுகொண்டே சாலையில் உலா வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட புத்தூர்வயல் மற்றும் விமலகிரி குடியிருப்புப் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் ஒற்றைக் காட்டு யானை உலா வந்தது. அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டின் தோட்டத்திற்குள் நுழைந்த யானை, அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்புகளைத் தும்பிக்கையால் பிடுங்கி, தனது வாயில் கவ்வியவாறு நட்டநடுச்சாலையில் நிதானமாகச் சுவைத்துக்கொண்டே உலா வந்தது.
அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களும் வாகன ஓட்டிகளும் சாலையில் கம்பீரமாக நடந்து வந்த யானையைக் கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கூடலூர் வனத்துறையினர் யானையை விரட்டினர். மேலும், அப்பகுதியில் முகாம்மிட்டிருந்த அந்த யானையைக் கும்கி யானைகளின் உதவியுடன் முதுமலை வனப்பகுதிக்குத் திருப்பும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.