தள்ளுவண்டி காய்கறி விற்பனையாளர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ.11 கோடி பரிசு!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தள்ளுவண்டி காய்கறி விற்பனையாளர் அமித் ஷேரா, பஞ்சாப் மாநிலத்துக்கு வேலைக்காக சென்றிருந்தபோது, தீபாவளி பம்பர் 2025 லாட்டரி டிக்கெட்டை வாங்க ஆசைப்பட்டார். ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லாததால், நண்பர் முகேஷிடம் கடன் வாங்கி டிக்கெட் பெற்றார்.
அந்த லாட்டரிக்கான குலுக்கல் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்றது. அதில் முதல் பரிசான ரூ.11 கோடி அமித் ஷேராவுக்கு அடித்தது. பதிண்டா பகுதியில் உள்ள கடையில் அவர் வாங்கிய டிக்கெட் அதிர்ஷ்டம் பெற்றது. லாட்டரி வெற்றியை அறிந்ததும் அவர் மிகுந்த உணர்ச்சியுடன், “இது கடவுள் அளித்த பரிசு. நான் கனவிலும் நினைக்காத ஒன்று இது. எனக்கு இப்பொழுது சண்டிகர் சென்று பரிசுத் தொகையை பெற வேண்டிய பணமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தப் பணத்தை வைத்து என் இரு குழந்தைகளின் கல்வியை சிறப்பாக அளிப்பேன். எனக்கு லாட்டரி டிக்கெட் வாங்க பணம் கடன் கொடுத்த நண்பர் முகேஷுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவருக்கு ரூ.1 கோடி கொடுப்பேன்” என அமித் ஷேரா கூறியுள்ளார்.