பிரம்மாண்டமாய் சரவணா ஸ்டோர் கடையில் தீ விபத்து.. ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

 

மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 10 தளங்களுடன் பிரம்மாண்டமாக சரவணா ஸ்டோர்ஸ் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் சுமார் 60 ஆயிரம் சதுர அடி என்கிற அளவில் செயல்பட்டு வருகிறது. 1000 கார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இந்த கட்டிடத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கீழ் தளத்தில் ஜுவல்லரியும், 2ஆவது தளத்தில் துணி கடையும், 3ஆவது தளத்தில் குழந்தைகளுக்கான துணி என படிப்படியாக மக்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 9ஆவது தளத்தில் உணவகம் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் 9ஆவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பெரியளவில் கரும்புகை எழுந்ததால் மக்கள் அலறினர். மேலும் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். உரிய நேரத்தில் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்ப்டடடதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து வாடிக்கையாளர்கள் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளே வருவதற்கு ஊழியர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 2க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்து இறங்கிய தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 108 அம்புலன்ஸ் சேவையும் வரவழைக்கப்பட்டுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.