இந்திய அரசியலில் புதிய வரலாறு... நேருவின் சாதனையை முறியடிக்கும் பிரதமர் மோடி! 

 

இந்திய அரசியல் வரலாற்றில் புதிய மைல்கல்லாக, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நீண்டகாலத் தொடர் சாதனையை முறியடித்து, நாட்டின் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பதவி வகித்த 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்' என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைக்க உள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி இந்தியாவின் பிரதமராக முதன்முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். அதன் பின்னர் 2019 மற்றும் 2024 ஆகிய பொதுத்தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைப் பெற்று, தற்போது 3-வது முறையாகப் பிரதமர் பதவியில் நீடித்து வருகிறார்.

இந்நிலையில், வரும் ஜூன் 10-ம் தேதியுடன் அவர் பிரதமராகத் தொடர்ந்து 4,399 நாட்களை நிறைவு செய்ய உள்ளார். இதன் மூலம், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 4,398 நாட்கள் தொடர் பிரதமர் பதவி என்ற முந்தைய சாதனையை அவர் அதிகாரப்பூர்வமாக முறியடிக்கிறார்.

இந்தியப் பிரதமர்களின் தொடர்ச்சியான ஆட்சிப் பொறுப்பு  பிரதமர் நரேந்திர மோடி: 4,399 நாட்கள் (வரும் ஜூன் 10, 2026 அன்று இந்த மைல்கல்லை எட்டுகிறார்) முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு: 4,398 நாட்கள் (மே 13, 1952-ல் முதல் பொதுத்தேர்தலுக்குப் பின் பதவியேற்றது முதல் மே 27, 1964-ல் அவர் மறையும் வரை) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி: 4,077 நாட்கள் (ஜனவரி 24, 1966 முதல் மார்ச் 24, 1977 வரை வகித்த தொடர் பதவி)

ஜவஹர்லால் நேரு இடைக்கால அரசாங்கத்தையும் சேர்த்து மொத்தம் 16 ஆண்டுகள் 286 நாட்கள் பிரதமர் பதவி வகித்துள்ளார். ஆனால், 1952-ல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு, மக்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிந்தைய 'தொடர்ச்சியான பதவிக்காலம்' என்ற கணக்கீட்டின் அடிப்படையில் மோடி இந்தச் சாதனையை முறியடிக்கிறார்.

அரசியல் களத்தில் பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் பிரதமர் மோடி, கடந்த மார்ச் மாதத்தில் தனது குஜராத் முதல்வர் மற்றும் இந்தியப் பிரதமர் ஆகிய ஒட்டுமொத்தப் பதவிக்காலத்தையும் சேர்த்து 8,931 நாட்களைக் கடந்து, இந்தியாவின் மிக நீண்ட காலம் 'அரசாங்கத்தின் தலைவராக' (Head of Government) இருந்த பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக முறியடிக்கப்படாமல் இருந்த நேருவின் இந்தத் தொடர் ஆட்சி சாதனையை ஜூன் 10 அன்று பிரதமர் மோடி முறியடிக்க உள்ளது, பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வட்டாரத்தில் தற்போதே பெரும் கொண்டாட்டங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.