ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை... சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நிகழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் சேசிங் (இலக்கைத் துரத்தும்போது) அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால உலக சாதனையை விராட் கோலி முறியடித்து புதிய சிகரம் தொட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதலாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
இதனைத் தொடர்ந்து மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பொறுப்புடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 74 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இறுதியில் இந்திய அணி 22.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 74 ரன்கள் சேர்த்ததன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலக்கைத் துரத்தும்போது அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன் இந்தியக் கிரிக்கெட் ஜம்பாவான் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இலக்கைத் துரத்தும்போது 8,720 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்தார்.
தற்போது விராட் கோலி 8,722 ரன்கள் எட்டி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துப் புதிய உலக சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 'சேசிங் மாஸ்டர்' என்று அழைக்கப்படும் விராட் கோலியின் இந்த வரலாற்று சாதனைக்குக் கிரிக்கெட் உலகமும் ரசிகர்களும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.