தமிழகத் தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை... ஒரே தொகுதியில் 7வது முறையாக களமிறங்கும் சக்கரபாணி!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில், ஒரே சின்னத்தில், ஒரே வேட்பாளர் தொடர்ந்து 7-வது முறையாகப் போட்டியிடுவது இதுவே முதல்முறை. இந்த அபூர்வ சாதனையைத் திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரம் தொகுதி படைக்கவுள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு முதல் இன்று வரை ஒட்டன்சத்திரம் தொகுதியைத் தனது கோட்டையாக மாற்றியுள்ளார் திமுகவின் அர. சக்கரபாணி. 1996, 2001, 2006, 2011, 2016, 2021 எனத் தொடர்ந்து 6 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 2026 தேர்தலில் 7-வது முறையாக அதே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அவருக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது.

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஆனால், அவர் பல்வேறு தொகுதிகளில் (குளித்தலை, அண்ணாநகர், சைதாப்பேட்டை, திருவாரூர் போன்றவை) மாறி மாறிப் போட்டியிட்டார். ஆனால், சக்கரபாணி தொடக்கத்திலிருந்தே ஒரே தொகுதியைத் தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அறந்தாங்கி (திருநாவுக்கரசர்) மற்றும் நத்தம் (விசுவநாதன்) ஆகிய தொகுதிகளும் 6 முறை வெற்றிகளைக் கண்டுள்ளன.

சமீபத்தில் ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி வாழ் மக்களுக்கு மின்சாரம், சாலை வசதி, குடிநீர் மற்றும் பாலங்கள் அமைத்துக் கொடுத்ததற்காக, அம்மக்கள் அமைச்சருக்கு நெகிழ்ச்சியான பாராட்டு விழா நடத்தினர். காடுகளில் விளையும் மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்களைச் சீர்வரிசையாக எடுத்து வந்து அமைச்சருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். இந்த மக்கள் செல்வாக்கே அவருக்கு 7-வது முறையாகப் போட்டியிடப் பலம் சேர்த்துள்ளது.

தற்போது உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருக்கும் சக்கரபாணி, தனது தொகுதியில் செய்துள்ள உட்கட்டமைப்புப் பணிகளை முன்வைத்துப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். "7-வது முறையும் ஒட்டன்சத்திரம் மக்கள் உதயசூரியனுக்கே வாக்களிப்பார்கள்" எனத் திமுகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.