பொங்கலுக்கு புதிய ரக விலையில்லா வேட்டி, சேலை.. ரூ.300 கோடி முன்வைப்பு நிதி ஒதுக்கீடு!
கிராமப்புற ஏழை எளிய மக்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்ந்த ஒரு முக்கிய அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வரும் 2027-ஆம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளை முன்கூட்டியே உற்பத்தி செய்வதற்கான நிர்வாக அனுமதியை வழங்கி, அதற்காக முதற்கட்ட முன்பணமாக ₹300 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை உற்பத்தி ஆணைகள் அக்டோபர் அல்லது நவம்பர் போன்ற தாமதமான மாதங்களில்தான் வெளியிடப்படுவது வழக்கம். இதனால் கடைசி நேரத்தில் விநியோகப் பணிகளில் தொய்வு ஏற்படுவதுடன், நெசவாளர்களுக்கும் போதிய கால அவகாசம் கிடைப்பதில்லை.
இப்பின்னணியைக் கருத்தில் கொண்டு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எம். விஜய் பாலாஜி மற்றும் முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோரின் ஆலோசனையின்படி, ஜூலை தொடக்கத்திலேயே இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணையின்படி கைத்தறி, விசைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் இந்த உற்பத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கடந்த சில மாதங்களாக நூல் விலை ஏற்ற இறக்கங்களால் ஜவுளித் தொழில் மந்தமடைந்துள்ள சூழலில், இந்த முன்கூட்டிய ஆணை மூலம் தமிழ்நாட்டின் ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்செங்கோடு மற்றும் பள்ளிப்பாளையம் பகுதிகளில் உள்ள 60,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு ஆண்டு முழுவதும் தடையற்ற வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான பருத்தி நூல்களைத் தமிழ்நாடு கூட்டுறவு நூற்பாலைகள் மற்றும் இந்தியக் பருத்திக் கழகம் மூலம் கொள்முதல் செய்து, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே நெசவுப் பணிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் டிசம்பர் இறுதிக்குள் பணிகளை முழுமையாக முடித்து, ஜனவரி முதல் வாரத்திலேயே ரேஷன் கடைகளுக்கு வேட்டி, சேலைகளை அனுப்ப ஏதுவாக இருக்கும்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இந்த விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளும் இணைத்து வழங்கப்பட உள்ளன. பயனாளிகளுக்குக் தங்குதடையின்றிப் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்ய, இம்முறை பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையின் கீழ் விநியோகம் முழுமையாகக் கண்காணிக்கப்படும் என்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.