பகீர் வீடியோ... 242 பயணிகளுடன் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானம்!
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விமானம், 242 பயணிகளுடன் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து ஏற்பட்டது.
இன்று பிற்பகல் 1:38 மணிக்கு புறப்பட்டு, 1:40 மணிக்கு நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் ஒரு போயிங் 787-8 ட்ரீம்லைனர் (பதிவு எண் VT-ANB) ஆகும், இது 11.5 ஆண்டுகள் பழமையானது. விமானம் டேக்-ஆஃப் செய்யும் போது ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்ததாக முதற்கட்ட அறிக்கைகள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த இடத்திலிருந்து கரும்புகை எழுவதாகவும், அருகிலுள்ள கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள், அவசர மீட்பு குழுக்கள் மற்றும் மருத்துவ உதவி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அத்துடன் 12 முதல் 24 அவசர மருத்துவ வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, படுகாயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் மற்றும் பணியாளர்கள் சேர்த்து மொத்தம் 242 இருந்ததாக மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை உறுதி செய்துள்ளது. அதில் 12 விமான பணியாளர்களும் அடங்குவர். அதே சமயம் உயிரிழப்பு அல்லது காயமடைந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.