வானில் அரிய நிகழ்வு.. பிறை நிலவுக்கு மிக அருகே பிரகாசமாக ஜொலித்த வெள்ளி கிரகம்!

 

வானில் நேற்று முன்தினம் இரவு மிக அரிய மற்றும் கண்கொள்ளாக் காட்சி ஒன்று அரங்கேறியது. மேகமூட்டமில்லாத தெளிவான வானத்தில், பிறை நிலவுக்கு மிக அருகில் வெள்ளி கிரகம் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போலப் பளபளப்பாக மின்னியது. வானியல் ஆர்வலர்களைக் கவரும் வகையில் நடைபெற்ற இந்த அழகு நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் மிகுந்த வியப்புடன் கண்டு ரசித்தனர்.

சூரிய குடும்பத்தில் உள்ள பிரகாசமான கோள்களில் ஒன்றான வெள்ளியும், இரவு வானின் பேரழகான சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் மிக அருகில் வருவது போலக் காட்சியளிக்கும் இந்த வானியல் நிகழ்வு 'சந்திரன் - வெள்ளி சேர்க்கை' என்று அழைக்கப்படுகிறது.

இந்நிகழ்வின் போது, மெல்லிய பிறை நிலவின் அருகே வெள்ளி கிரகம் ஒரு பெரிய, ஒளிரும் வைரத்தைப் போல மிகவும் தெளிவாகவும் பிரகாசமாகவும் காட்சி தரும். இது வெறும் கண்களுக்கே மிக அழகாகத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அரிய வானியல் மாற்றங்கள் எப்போதாவது மட்டுமே நிகழும் என்பதால், வானவியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் மாடிகளிலும் திறந்தவெளிகளிலும் நின்று இந்த விந்தைக் காட்சியைப் புகைப்படம் எடுத்தும், கண்டு களித்தும் மகிழ்ந்தனர்.