அமிதாப் பச்சன் வீட்டின் முன் போராட்டம் நடத்தினால் ரூ.11 லட்சம் சன்மானம் - மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

 

பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மும்பை இல்லத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்துவோருக்கு 11 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் மிரட்டல் விடுத்துள்ளதைத் தொடர்ந்து, அவரது வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள 'ஜல்ஸா' பங்களாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது, அமிதாப் பச்சன் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் விவகாரத்தை முன்வைத்து, கனடாவில் பதுங்கியுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் அவ்வப்போது மிரட்டல் விடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, நடிகர் அமிதாப் பச்சனுக்கு அவர் தற்போது மீண்டும் ஒரு புதிய மிரட்டலை விடுத்துள்ளார். அதில், இன்று முதல் வரும் 27-ஆம் தேதி வரை மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் இல்லத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்துமாறு தனது ஆதரவாளர்களுக்கு பன்னூன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்துவோருக்கு 11 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து அமிதாப் பச்சனுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், தற்போது காலிஸ்தான் பயங்கரவாதி பன்னூனிடமிருந்தும் நேரடி மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது மும்பை காவல்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் 'ஜல்ஸா' பங்களாவைச் சுற்றிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, கூடுதல் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.