undefined

 முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் 2 வது திருமணம் பதிவு செய்ய முடியாது...உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! 

 
 

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த 44 வயதான இஸ்லாமிய நபர் ஒருவர், 38 வயது பெண்ணை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்தார். முதல் மனைவி உயிருடன் இருப்பதால், அந்த திருமணத்தை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலர்கள் மறுத்தனர். இதனை எதிர்த்து அவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் நான்கு பெண்களை வரை திருமணம் செய்ய அனுமதி உண்டு. எனவே என் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” எனக் கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, “இஸ்லாமிய ஆண்கள் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்ய முடியாது. திருமணத்தை பதிவு செய்வதற்கு முன், முதல் மனைவியின் கருத்தை கேட்குவது அவசியம். அவர் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த திருமணத்தை பதிவு செய்யக்கூடாது,” எனத் தெரிவித்தது.

 

நீதிபதிகள் மேலும் தெரிவித்ததாவது: “அடிப்படை உரிமைகள், மத உரிமைகளை விட முக்கியமானவை. இரண்டாவது திருமணத்தை எதிர்க்கும் பெண்களின் கருத்தை புறக்கணிக்க முடியாது. இஸ்லாமிய சட்டத்தின்படியே பார்த்தாலும், ஒரு ஆண் ஒருவருக்கு மேற்பட்ட மனைவிகளை சமமாக நடத்தும் திறன் இருந்தால் மட்டுமே பல திருமணங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்வதை திருக்குர்ஆனோ அல்லது இஸ்லாமிய சட்டங்களோ ஆதரிக்கவில்லை,” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

 

மேலும், மனுதாரர் தாக்கல் செய்த மனுவில் அவரது முதல் மனைவியின் தரப்பு சேர்க்கப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். “ஒரு இஸ்லாமிய பெண் தனது கணவரின் இரண்டாவது திருமணத்தில் அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை” என வலியுறுத்திய நீதிமன்றம், அந்த நபரின் மனுவை தள்ளுபடி செய்தது.