இன்று சட்டசபையில் தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி தனித் தீர்மானம்!
மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளில் தமிழ்நாட்டிற்கு உரிய மற்றும் நியாயமான நிதிப் பகிர்வை வழங்க வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் மரிய வில்சன் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிகிறார். மாநிலங்கள் தங்களுக்கான வளர்ச்சி மற்றும் சேவைப் பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்ற நியாயமான மற்றும் சமத்துவமான நிதிப் பகிர்வு அவசியமாகும்.
தமிழ்நாடு தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி, தொழிற்துறை முன்னேற்றம் மற்றும் வரி வசூலில் தேசிய பொருளாதாரத்திற்குப் பெருமளவு பங்களித்து வருகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, மனித வள மேம்பாட்டில் சிறந்து விளங்கும் மாநிலங்கள், நிதிப் பகிர்வு அளவுகோல்களால் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. மத்திய வரிகள் பகிர்வில் வெளிப்படையான, சமமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
இத்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட அனைத்துக் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் விவாதத்தில் பங்கேற்றுப் பேச உள்ளனர். விவாதத்தின் முடிவில் குரல் வாக்கெடுப்பு (Voice Vote) நடத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.