தவெகவில் அடுத்தடுத்து அதிர்ச்சி... பாத்திரக்கடை உரிமையாளரைத் தாக்கி ரூ.68,700 பறிப்பு - தவெக கிளைச் செயலாளர் மீது புகார்!
கும்பகோணம், ஆடுதுறை ரயில் நிலைய சாலையில் பாத்திரக்கடை நடத்தி வரும் உரிமையாளர் மற்றும் அவரது மகன்கள் மீது ஒரு கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்திப் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் சிசிடிவி காட்சிகளுடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடுதுறை ரயில் நிலைய சாலையில் கோடீஸ்வரன் என்பவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்து, கோடீஸ்வரன் மற்றும் அவரது மகன்களான பிரபாகரன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் வீட்டிற்குப் புறப்பட்டுள்ளனர். அப்போது சந்திரன் என்பவர் தலைமையில் காத்திருந்த ஒரு கும்பல், கோடீஸ்வரன் குடும்பத்தினரை வழிமறித்துக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. தாக்குதலின் போது கோடீஸ்வரன் பையில் வைத்திருந்த 68,700 ரூபாய் பணத்தை அந்த கும்பல் வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றது.
தாக்குதலுக்குள்ளான பாலசுப்பிரமணியன் கூறுகையில், "இந்தக் கும்பல் அடிக்கடி கடைக்கு வந்து மாமூல் கேட்டு மிரட்டி வந்தது. நாங்கள் பணம் தர மறுத்த காரணத்தினால், நேற்று இரவு திட்டமிட்டு எங்களை வழிமறித்துக் கல்லால் அடித்தும், கொடூரமாகவும் தாக்கினார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆடுதுறை கிளைச் செயலாளர் எடிசன் என்பவரும் இருந்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்துத் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் எடிசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. எடிசன் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆதாரமாகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
காயமடைந்த கோடீஸ்வரன் மற்றும் அவரது மகன்கள் பிரபாகரன், பாலசுப்பிரமணியன் ஆகிய மூவரும் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின் போது அந்தக் கும்பல் கற்களைக் கொண்டு எறிவதும், கைகளால் கொடூரமாகத் தாக்குவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள எடிசன் மற்றும் சந்திரன் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.