தவெக அரசுக்கு பின்னடைவு... எம்எல்ஏ அருள்விக்னேஷ் ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல்!

 

கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பித் தொந்தரவு அளித்த புகாரில், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத் தலையீடு மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக எழுத்துப்பூர்வப் புகாரைப் பெற்ற காவல்துறையினர், எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச்சட்டம், பாலியல் துன்புறுத்தல் (பி.என்.எஸ். 75), பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல் (பி.என்.எஸ். 78) மற்றும் அரசு ஊழியரின் பணிக்கு இடையூறு விளைவித்தல் (பி.என்.எஸ். 132) உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வழக்கில் பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்ட செல்போனைப் பறிமுதல் செய்து சைபர் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பவும், எம்.எல்.ஏ. அருள்விக்னேஷை விரைவில் கைது செய்யவும் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஒருபுறம் காவல்துறையின் கைது நடவடிக்கை நெருங்கி வருவதும், மறுபுறம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைத்துத் தரப்பினரும் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கடும் அழுத்தம் கொடுத்து வருவதும் த.வெ.க. தலைமைக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பதவியை அருள்விக்னேஷ் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.