கயானாவில் நடுக்கடலில் மூழ்கிய கப்பல்; 27 பேர் உயிரிழப்பு, 80-க்கும் மேற்பட்டோர் மாயம்!
தென் அமெரிக்க நாடான கயானாவின் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில், 'எம்.வி. பாரிமா' என்ற பயணிகள் கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்; 80-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். தலைநகர் ஜார்ஜ் டவுனில் இருந்து சுமார் 116 பயணிகள் மற்றும் 17 ஊழியர்களுடன் 'போர்ட் கைடூமா' நோக்கிப் புறப்பட்ட இந்தக் கப்பல், கரையிலிருந்து சுமார் 7 மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென பேரலையில் சிக்கி தலைகீழாகக் கவிழ்ந்தது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் கயானா கடலோரக் காவல் படை, தனியார் படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர் குழந்தைகளும் பெண்களும் உட்பட 69 பேர் கடலில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளின் போது இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான 80-க்கும் மேற்பட்டோரைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
1939-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பழைய கப்பலில், அனுமதிக்கப்பட்ட அளவை விடக் குறைவான எடையும் குறைந்த அளவிலான பயணிகளுமே இருந்ததாக அந்நாட்டுப் பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடலில் ஏற்பட்ட சீற்றமான அலையின் காரணமாகவே கப்பல் கவிழ்ந்ததாக மீட்கப்பட்ட பயணிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளின் பட்டியலில் பெரும் குளறுபடிகள் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கப்பலின் மாலுமி மற்றும் முதன்மை பொறியாளர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.