தமிழக அரசியலில் திடீர் திருப்பம்... அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா! தவெகவில் இணைந்து போட்டியிட முடிவு!

 

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய அதிரடித் திருப்பமாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த 3 முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்துள்ளனர்.

அதிமுக உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள இந்தச் சூழலில், இவர்கள் மூவரும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையத் திட்டமிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் தீவிர ஆதரவாளர்களாகவும், அவரது அணியில் முக்கியப் புள்ளிகளாகவும் வலம் வந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளைத் துறந்துள்ளனர்.

மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், மற்றும் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா ஆகிய மூவரும் இன்று பிற்பகல் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்தனர். அப்போது தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வதற்கான அதிகாரப்பூர்வ கடிதங்களை அவர்கள் சபாநாயகரிடம் வழங்கினர். அவர்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

பதவியை ராஜினாமா செய்துள்ள 3 எம்.எல்.ஏ.க்களும் அடுத்தகட்டமாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவில் தங்களை இணைத்துக் கொள்ள முழுமையாக முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன: தவெகவில் இணைந்த கையோடு, தங்களது ராஜினாமாவால் காலியாகும் மதுராந்தகம், பெருந்துறை, மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களாக அதே தொகுதிகளில் மீண்டும் போட்டியிட இவர்கள் மூவரும் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே இன்று காலை எஸ்பி வேலுமணி அணியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்குத் தங்களின் ஆதரவை வழங்கி அதிர்ச்சி கொடுத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்பொழுது மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெக பக்கம் தாவியிருப்பது, அதிமுக சட்டமன்றக் குழுவிலும், எஸ்பி வேலுமணி முகாமிலும் மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்ற 15 நாட்களுக்குள்ளாகவே எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தனது பக்கமிழுத்து, அவர்களை ராஜினாமா செய்ய வைத்துள்ள தவெகவின் இந்த அசுர வேக அரசியல் வியூகம், தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் தற்பொழுது தன்பக்கம் உற்று நோக்க வைத்துள்ளது.