குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்... 2 அரசு மருத்துவர்களிடம் விடிய விடிய போலீசார் விசாரணை!
தமிழக வெற்றிக் கழகசட்டமன்ற உறுப்பினர்ஒருவரிடம் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ₹35 கோடி குதிரை பேரம்பேசப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், புதிய திருப்பமாக இரண்டு அரசு மருத்துவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் குதிரை பேரம் மற்றும் சதித் திட்டம் தீட்டிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உட்பட 5 நபர்களைக் காவல் துறையினர் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் உள்ள அந்த 5 நபர்களிடம் போலீசார் நடத்திய விரிவான தனிப்படை விசாரணையின் போது, அவர்கள் அளித்த ரகசிய வாக்குமூலங்கள் மற்றும் செல்போன் அழைப்பு விபரங்களின் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. அதன் தொடர்ச்சியாகவே திருப்பூரைச் சேர்ந்த அரசு மருத்துவர் ராஜசேகர் மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் போலீசாரின் புதிய விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களுக்கும், இந்த இரண்டு அரசு மருத்துவர்களுக்கும் இடையே பலமுறை ரகசிய பணப் பரிவர்த்தனைகள் குறித்தும், சொத்துக்களைக் கையாள்வது குறித்தும் உரையாடல்கள் நடந்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் நேற்று இரவு இந்த இரண்டு மருத்துவர்களையும் தனித்தனியாக ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடியத் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
₹35 கோடி பேரத் தொகையை கைமாற்றுவதற்கும், அதைச் சட்டப்பூர்வமாக மறைப்பதற்கும் இந்த மருத்துவர்களின் வங்கிக் கணக்குகள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டதா அல்லது இவர்களின் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் தங்களது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் அதே வேளையில், இந்த வழக்கில் இரண்டு அரசு மருத்துவர்கள் சிக்கி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் இந்த நகர்வு அரசியல் மற்றும் மருத்துவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.