11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி... நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு!

 

மத்திய பொதுச்சேவை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வினாத்தாள் கசிவு சர்ச்சையினால் ஜூன் 21-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த மறுதேர்வின் முடிவுகள் திட்டமிட்டதற்கு முன்பாகவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நீட் மறுதேர்வில் எந்தவொரு மாணவரும் முழுமையாக 720-க்கு 720 மதிப்பெண்கள் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப்பைச் சேர்ந்த ஆர்யன் குப்தா, அரியானாவைச் சேர்ந்த பான்ஷுல் பன்சால் ஆகிய இரு மாணவர்கள் 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை 19 மாணவர்களும், 690-க்கும் அதிகமான மதிப்பெண்களை 138 மாணவர்களும் பெற்றுள்ளனர். இதில் விசேஷம் என்னவென்றால், 690-க்கும் மேல் பெற்றவர்களில் 93 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதல்முறையாகத் தேர்வு எழுதியவர்கள் ஆவர்.

நாடு முழுவதும் உள்ள 5,400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த மறுதேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில் 11.21 லட்சம் மாணவர்கள் மருத்துவக் கலந்தாய்விற்குத் தகுதி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 56.05% ஆகும்.

இத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 56.8 சதவீதத்தினரும், மாணவர்களில் 55.1 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மொத்த மாணவர்களில் 58 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாணவிகள் ஆவர்.

மருத்துவக் கலந்தாய்வு அட்டவணை தாமதமாவதைத் தவிர்க்கும் பொருட்டு, இறுதி விடைக்குறிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் அட்டையைத் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in அல்லது nta.ac.in பக்கத்திற்குச் சென்று, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டுப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் வசதிக்காக இந்த மதிப்பெண் சான்றிதழ்கள் மத்திய அரசின் 'டிஜிலாக்கர்' கணக்கிலும் பாதுகாப்பாகப் பதிவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.