3 மையங்களில் 612 தேர்வர்கள் பங்கேற்பு... இன்று புதுச்சேரியில் ராணுவப் பணித் தேர்வு!
மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் தேசிய ராணுவ அகாடமி (NDA), கடற்படை அகாடமி மற்றும் ஒருங்கிணைந்த ராணுவ சேவைகளுக்கான (CDS) தேர்வுகள் இன்று (ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரியில் உள்ள மூன்று முக்கிய மையங்களில் நடைபெறுகின்றன.
புதுச்சேரியை ஒரு தேர்வு மையமாகத் தேர்வு செய்துள்ள 612 தேர்வர்களுக்காகப் பின்வரும் கல்வி நிறுவனங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த ராணுவச் சேவைக்கான (CDS) தேர்வு காலை 9 மணி முதல் மூன்று பிரிவுகளாக நடக்கிறது. இதில் 140 தேர்வர்கள் பங்கேற்கின்றனர்.
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை அகாடமிக்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் இரண்டு பிரிவுகளாக நடக்கின்றன. இதில் 277 தேர்வர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை வள்ளலார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 195 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வர்கள் எவ்வித இடையூறுமின்றித் தேர்வு மையங்களுக்குச் செல்ல புதுச்சேரி அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது: புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 7:30 மணி முதல் தேர்வு மையங்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேர்வு முடிந்த பின்னரும் தேர்வர்கள் திரும்பச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
தேர்வுப் பணிகளைப் புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையின் சார்புச் செயலர் எஸ். முருகேசன் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே மையங்களின் வாயில்கள் மூடப்படும். அதற்குப் பின் வரும் தேர்வர்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் முன்கூட்டியே மையங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.