“மொத்தம் ரூ.2 கோடி அப்போய்... கெத்து காட்டிய மாமன்’.. இரண்டு மணமகன்களுக்கும் திருமண பரிசாக தலா ரூ.1 கோடி பணமாலை!

 

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற திருமண விழாவில், இரு சகோதர மணமகன்களுக்குத் தலா ரூ.1 கோடி மதிப்பிலான பிரம்மாண்டப் பணமாலைகள் அணிவிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 100 அடி நீளம் கொண்ட இந்தப் பணமாலைகள் வீட்டு மாடியில் இருந்து தெரு வரை நீண்டிருந்த காட்சிகள் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் நாக்லா போண்டா கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் கன்ஹா ராகவ் ஆகிய இரு சகோதரர்களுக்கும் ஒரே நாளில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற திருமண ஊர்வலத்தின்போது, மணமகன்கள் பிரசாந்த் மற்றும் கன்ஹா ராகவ் ஆகியோர் குதிரைகளில் ஏறி மணமகள்களின் கிராமத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர். இந்நிகழ்வில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

திருமணச் சடங்குகளின் போது உறவினர்கள் பலரும் மணமக்களுக்குப் பரிசுகளை வழங்கினர். அப்போது, சகோதரர்களின் அக்கா கணவரும், ராஜஸ்தான் மாநிலம் நந்தோலா கிராமத் தலைவருமான யோகேஷ் குமார், தனது மைத்துனர்களுக்கு மறக்க முடியாத பரிசை வழங்க முடிவு செய்தார்.

ரூ.500 நோட்டுகளில் 100 அடி பணமாலை: இதற்காக ரூ.500 ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் கொண்டு பிரம்மாண்டமான இரண்டு பணமாலைகள் தயாரிக்கப்பட்டன. தலா ரூ.1 கோடி வீதம் இரு மாலைகளும் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடி மதிப்புடையதாக இருந்தன. ஒவ்வொரு மாலையும் சுமார் 100 அடி நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

ரூபாய் நோட்டுகளால் உருவாக்கப்பட்ட இந்தப் பணமாலைகள் மிக அதிக எடையுடன் இருந்ததால், மணமகன்கள் இருவரும் வீட்டின் மாடியில் நின்றிருக்க அவர்களுக்குப் பணமாலைகள் அணிவிக்கப்பட்டன. வீட்டு மாடியில் இருந்து கீழே உள்ள தெரு வரை நீண்டிருந்த அந்த 100 அடி நீளப் பணமாலைகளைத் தரையில் படாதவாறு உறவினர்கள் பலர் சேர்ந்து கைகளில் தாங்கிப் பிடித்திருந்தனர். திருமணத்தில் வழங்கப்பட்ட இந்தப் பிரம்மாண்டப் பரிசைக் கண்ட கிராம மக்களும் உறவினர்களும் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.