undefined

 பைக் மீது வேன் மோதி விபத்து.. சம்பவ இடத்திலேயே பலியான காவலர்!

 
 


தூத்துக்குடி  மாவட்டம் பழையகாயல் அருகே பைக் மீது வேன் மோதியதில் காவலர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி முள்ளக்காடு சவேரியார்புரம் ராஜு நகர் 3வது தெருவைச் சேர்ந்த சௌந்தரபாண்டி மகன் ஜேசு ஆல்வின் ராஜா (28). ஆத்தூர் காவல் நிலையத்தில் 2ம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த அவருக்கு மனைவி, ஆண் குழந்தை உள்ளனர். 

இந்நிலையில், ஜேசு ஆல்வின் கடந்த சனிக்கிழமையன்று இரவு பணிக்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார். பழைய காயலை அடுத்த முக்காணி தனியார் எடை நிலையம் அருகே இவர் சென்றுக் கொண்டிருந்த போது, பழைய காயலில் உள்ள இறால் நிறுவனத்துக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த வேன் ஜேசு ஆல்வின் வாகனத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜேசு ஆல்வின் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான திருநெல்வேலி­ மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் மணிகண்டன் (25) என்பவரைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.