உயிரிழந்த குட்டியை முதுகில் சுமந்து நீந்திய தாய் டால்பின் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
கடல் வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களைப் போன்றே ஆழமான உணர்வுகளும் தாய்மையின் பாசமும் உண்டு என்பதை நினைவூட்டும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாக் கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில், 'ப்ராகிள்' என்று பெயரிடப்பட்ட தாய் டால்பின் ஒன்று, உயிரிழந்த தனது குட்டியை நீரில் மூழ்கவிடாமல் தன் முதுகில் தாங்கியபடி பல நாட்கள் நீந்திச் சென்றுள்ளது. குட்டி நீரில் சரியும்போதெல்லாம் அதனை மீண்டும் மேலே தள்ளிச் சுமந்து செல்லும் காட்சி நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.
இந்தக் காட்சிகளைப் பதிவு செய்த ஆஸ்திரேலியக் கடல் ஆய்வு அமைப்பு, இந்தத் தாய் டால்பின் இதற்கு முன்பும் தனது 4 குட்டிகளை இழந்துள்ளதாகவும், தற்போது பிறந்த இந்த ஐந்தாவது குட்டியும் உயிரிழந்தது அதன் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டால்பின்கள் அதிகக் கூர்மை மற்றும் புத்திசாலித்தனம் கொண்டவை. அவை வலுவான குடும்பப் பிணைப்பைக் கொண்டிருப்பதால், குட்டி இறந்துவிட்டாலும் அதனை உடனடியாகப் பிரிய மனமில்லாமல் பல நாட்கள் சுமந்து திரிவது அவற்றின் இயல்பான குணங்களில் ஒன்று என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
"தாய்ப்பாசத்திற்கு எல்லை இல்லை", "விலங்குகளின் உணர்வுகள் மனதைக் கனக்கச் செய்கின்றன" என இணையவாசிகள் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்து வர, இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.