“பெண்ணின் விருப்பமில்லாமல் கருவை சுமக்க கட்டாயப்படுத்த முடியாது” - உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு... எய்ம்ஸ் எதிர்ப்பையும் மீறி அனுமதி!

 

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவரின் 24 வாரக் கருவைக் கலைக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 24 வாரங்களுக்கு மேலாகக் கருவுற்றிருந்த ஒரு சிறுமி, தனது கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் மருத்துவப் பரிசோதனை செய்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசு தரப்பு சில முக்கிய வாதங்களை முன்வைத்தது.

கரு கலைக்கப்பட்டால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், கருவின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் அதனைச் சுமப்பதே பாதுகாப்பானது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சட்டம் அனுமதிக்கும் கால வரம்பைத் தாண்டிவிட்டதால் இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது எனக் கோரப்பட்டது. இந்த வாதங்களை நிராகரித்த நீதிபதிகள் அமர்வு, மிகத் தெளிவான சில கருத்துக்களைப் பதிவு செய்தது:

ஒரு பெண் தனது உடலில் கருவைச் சுமப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் முழு உரிமை அந்தப் பெண்ணுக்கே உண்டு. விருப்பமில்லாத கருவைத் தொடர்ந்து சுமக்கக் கட்டாயப்படுத்துவது அந்தப் பெண்ணிற்குத் தீராத மன உளைச்சலையும், சமூகச் சிக்கல்களையும் ஏற்படுத்தும். இது மனித உரிமைகளுக்கு எதிரானது. குறிப்பாகப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. இதில் அரசு அல்லது மருத்துவமனைகள் தலையிட முடியாது.

இந்தியாவில் ‘மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம்’ (MTP Act) 24 வாரங்கள் வரை மட்டுமே அனுமதி அளிக்கும் நிலையில், விதிவிலக்கான சூழல்களில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு, இனி வரும் காலங்களில் இது போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு பெரிய சட்டப் பாதுகாப்பாக அமையும். உடனடியாக அந்தச் சிறுமிக்குத் தகுந்த மருத்துவ வசதிகளுடன் கருக்கலைப்பு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.