போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை பெயரில் தாக்கப்பட்ட பெண்கள் - வழக்கறிஞரையும் தாக்கியதாகப் புகார்!

 

சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற பெண்கள் தாக்கப்பட்டதுடன், காவல் நிலையத்திற்குச் சென்ற பெண் வழக்கறிஞர் மீதும் ஆண் காவலர்கள் தாக்குதல் நடத்தியதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்குச் சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இளைஞர்களைப் பார்ப்பதற்காகக் காவல் நிலையத்திற்குச் சென்ற வள்ளி மற்றும் திருமலை ஆகிய பெண்களைப் போலீசார் தாக்கியதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக லாக்கப்பில் அடைத்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைக் தட்டிக்கேட்டு விசாரிப்பதற்காகக் காவல் நிலையத்திற்குச் சென்ற பெண் வழக்கறிஞர் ஜெயந்தி மீதும் ஆண் காவலர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் விசாரணையின் பெயரில் பெண்களையும் வழக்கறிஞரையும் தாக்கிய தொடர்புடைய காவலர்கள் மீதும், காவல் நிலைய நிர்வாகத்தின் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீவிரக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.