டிஎன்ஏ பரிசோதனை மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த இளைஞர்!

 

சீனாவில் 35 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர், தனது விசித்திரமான சிறுவயதுப் பழக்கத்தால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் உலகளவில் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

சீனாவின் ஹெநான் மாகாணத்தைச் சேர்ந்த லீ ஸெக்கிங் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர், கடந்த 35 வருடங்களாகத் தனது குடும்பத்தைப் பிரிந்து தவித்த நிலையில் இந்த அரிய குடும்ப மறுசந்திப்பு சாத்தியமாகியுள்ளது.

கடந்த 1991 ஆம் ஆண்டு, லீ ஸெக்கிங் என்ற 4 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது விளையாட்டாக அருகில் நின்று கொண்டிருந்த ஒரு ரயிலில் ஏறியுள்ளான். ரயிலின் உள்ளே சென்ற சிறுவன், ஒரு இருக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டு படுத்த படியே அங்கேயே அயர்ந்து தூங்கிவிட்டான். ரயில் புறப்பட்டதை அறியாத அந்தச் சிறுவன் கண் விழித்துப் பார்த்தபோது, முற்றிலும் புதியதொரு இடத்திற்குச் சென்றிருந்தான்.

லீ வாய் பேசவும், காது கேட்கவும் முடியாத மாற்றுத்திறனாளி என்பதால், அவனால் தனது ஊர் மற்றும் பெற்றோர் விபரங்களை யாரிடமும் கூற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ஷென்சென் நகருக்குச் சென்ற அவனுக்கு, அங்கிருந்த ஒரு உணவக உரிமையாளர் அடைக்கலம் கொடுத்துத் தத்தெடுத்து வளர்த்துள்ளார்.

லீ ஸெக்கிங்கிற்குச் சிறுவயதிலிருந்தே தனது பெயரை நேராக எழுதாமல், தலைகீழாக எழுதும் ஒரு தனித்துவமான விசித்திரப் பழக்கம் இருந்துள்ளது. பல வருடங்கள் கழித்து, தனது உண்மையான குடும்பத்தைத் தேடும் முயற்சியாக இணையத்தில் லீ ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார். அதே நேரத்தில் அவரது குடும்பத்தினரும் அவரை பல வருடங்களாகத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இணையத்தில் லீ பதிவிட்ட செய்தியையும், அவர் தனது பெயரைத் தலைகீழாக எழுதியிருந்த அந்த விசித்திரமான பழக்கத்தையும் அவரது சொந்தச் சகோதரர் தற்செயலாக இணையத்தில் கவனித்துள்ளார். தனது தம்பியின் இந்தச் சிறுவயதுப் பழக்கத்தை நினைவுகூர்ந்த அவர், அது தனது தம்பிதான் என்பதை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார்.

இது குறித்து உடனடியாகச் சீனக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பிலும் அதிகாரப்பூர்வமாக டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், இணையத்தில் தகவல் பகிர்ந்த நபர் 35 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன லீ ஸெக்கிங் தான் என்பது 100% உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஷென்சென் நகரில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சந்திப்பில், தனது வயதான தந்தை, சகோதரர் மற்றும் சகோதரியை லீ நேரில் சந்தித்துக் கட்டிப்பிடித்து அழுதார். 4 வயதில் காணாமல் போய் 35 வருடங்களுக்குப் பிறகு தனது மகன் வாலிபனாக நேரில் வந்து நிற்பதைக் கண்டு, அவரது தந்தை கண்ணீர் விட்டு அழுத காட்சி ஒட்டுமொத்தச் சீன ஊடகங்களையும், சமூக வலைதளவாசிகளையும் நெகிழச் செய்துள்ளது.