பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் கேட்டதைத் தட்டிக்கேட்ட இளைஞருக்கு அடி, உதை... பகீர் வீடியோ!

 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டிலுக்குக் கூடுதலாகப் பணம் கேட்ட ஊழியர்களைத் தட்டிக்கேட்ட வாலிபர் ஒருவரைக் கடையிலிருந்த ஊழியர்கள் கம்பால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிக்கக் கூடாது எனப் பல்வேறு உத்தரவுகள் உள்ள நிலையிலும், இந்த அத்துமீறல் அரங்கேறியுள்ளது.

வத்திராயிருப்பு அரசு டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்கச் சென்ற இளைஞர் ஒருவரிடம், அங்கிருந்த ஊழியர்கள் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகக் கேட்டுள்ளனர். "அரசு நிர்ணயித்த விலையை விட ஏன் கூடுதலாகப் பணம் கேட்கிறீர்கள்?" என அந்த இளைஞர் நியாயமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள், அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமின்றி, அங்கிருந்த கட்டைக் கம்புகளை எடுத்து அவரைப் பாய்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவர் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லிவிடக் கூடாது அல்லது வீடியோ எடுத்துவிடக் கூடாது என்ற நோக்கில், அவரது செல்போனையும் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு அடாவடி செய்துள்ளனர்.

டாஸ்மாக் கடைக்கு முன்பாகப் பொதுமக்கள் பலரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இந்தத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. கூடுதல் விலைக்குப் பாட்டில் விற்பது குறித்துப் பல புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது கேள்வி கேட்ட நுகர்வோர் மீது ஊழியர்களே வன்முறையைக் கையாண்டிருப்பது அப்பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய டாஸ்மாக் ஊழியர்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது போலீஸார் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.