திருமணமான 8 நாட்களில் 2வது திருமணம் செய்துக் கொண்ட இளம்பெண்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான எட்டே நாட்களில் மணப்பெண் ஒருவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, காதலனை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட விசித்திரச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்குக் குடும்பத்தினரால் அண்மையில் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடிந்து மணமகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் மாமியார் வீட்டிற்குச் சென்றார். ஆனால், திருமணமான முதல் இரவிலேயே தனது கணவருக்குத் தாம்பத்திய உறவில் துளியும் ஈடுபாடில்லை என்ற அதிர்ச்சித் தகவலை அந்தப் பெண் கண்டறிந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், அந்த வீட்டிலிருந்து எப்படியாவது தப்பித்துவிட முடிவு செய்தார்.
கணவரின் நடத்தையால் அதிருப்தியடைந்த மணப்பெண், விடிந்தவுடன் மாமியார் வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத் தப்பியோடினார். நேராகத் தான் ஏற்கனவே காதலித்து வந்த காதலனின் வீட்டிற்குச் சென்று அவரிடம் தஞ்சமடைந்தார். மருமகள் திடீரெனக் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முதல் கணவனின் குடும்பத்தார், அவர் காதலன் வீட்டில் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் இருதரப்பிற்கும் இடையே பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தீர்வு காண அந்தப் பகுதியின் கிராம பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. பஞ்சாயத்து பெரியவர்கள் முன்னிலையில் இருதரப்பு நியாயங்களும் விரிவாகக் கேட்கப்பட்டன. அப்போது, அந்தப் பெண் தனக்கு இந்த கணவருடன் வாழ விருப்பமில்லை என்றும், தனது காதலனுடன் வாழவே விரும்புவதாகவும் திட்டவட்டமாகக் கூறினார்.
பெண்ணின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கிராம பஞ்சாயத்தினர், ஒரு சுமுகமான முடிவை எடுத்தனர். அதன்படி, அந்தப் பெண்ணிற்கு அவரது முதல் கணவரிடமிருந்து உடனடியாக விவாகரத்து பெற்றுத் தந்தனர். அதோடு நிறுத்தாமல், விவாகரத்து பெற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே, அந்தப் பெண்ணிற்கு அவர் ஆசைப்பட்ட காதலனுடன் முறைப்படி மறுமணமும் செய்து வைத்தனர். முதன்முதலில் திருமணம் நடந்த 8 நாட்களுக்குள்ளேயே, விவாகரத்து மற்றும் இரண்டாவது திருமணம் என அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்த இந்தச் சம்பவம் ராம்பூர் கிராம மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.