ரஜினியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜுனா... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!
வாயில் இருந்து கொட்டப்படுகிற வார்த்தைகளை திரும்ப பெற முடியாது என்பதை உணர்ந்தவர் ரஜினி, அவசரத்துல பேசினாலும், வார்த்தைகளில் நிதானம் காட்டுபவர். தமிழகத்தில் இன்னமும் சூப்பர் ஸ்டார் என்று அவரை ரசிகர்கள் கொண்டாடுவதற்கு நடிப்பையும், ஸ்டைலையும் தாண்டி பல காரணங்கள் உள்ளன.
தேன் கூட்டைக் கலைப்பது போல வார்த்தைகளைக் கொட்டி விட்டு, சங்கடப்பட்டுக் கொண்டிருந்த தவெக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, தனது வார்த்தைகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
தொழிலதிபர் மற்றும் விளையாட்டுத் துறையில் ஈடுபாடு கொண்ட, தமிழக அரசியலில் வளர்ந்து வரும் ஆதவ் அர்ஜுனா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் (விசிக) இணைந்து குறுகிய காலத்திலேயே துணைப் பொதுச்செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பைப் பெற்றார். அதன் பின்னர் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், விசிகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்தார். சமீபத்தில் இவர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ரஜினி பற்றிய பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்தும், சினிமாவில் அவர் வகிக்கும் இடத்திற்கும் நிஜ அரசியல் அதிகாரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும் ஆதவ் அர்ஜுனா பேசினார். ஒரு கட்டத்தில், ரஜினிகாந்தை ஒரு தனிநபராக விவரிக்கும்போது அவர் பயன்படுத்திய வார்த்தைகள் "அவமரியாதை" செய்யும் விதமாக இருப்பதாக ரஜினி ரசிகர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வீடியோ வைரலானதும், ரஜினி ரசிகர்கள் ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும், ரஜினிகாந்த் போன்ற ஒரு மூத்த ஆளுமையைக் குறைவாக மதிப்பிட்டுப் பேசுவது கண்டிக்கத்தக்கது எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று இது குறித்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆதவ் அர்ஜுனா, தற்போது பகீரங்கமாக தனது பேச்சு மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மீது எனக்கு என்றும் மிகுந்த மரியாதையுண்டு. எனது பேச்சின் ஒரு பகுதி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தனது பேச்சு யாருக்கேனும் வருத்தத்தை அளித்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பதாகக் குறிப்பிட்ட அவர், தூத்துக்குடி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை திசைதிருப்பவே இந்த விவகாரம் தற்போது பெரிதாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.