கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடக்கம் - திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்பு!
கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகுவிமரிசையாக நடைபெறும் 12 நாள் ஆடி களப பூஜை விழா கோலாகலமாகத் தொடங்கியது. களப பூஜையில் பங்கேற்க வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்குத் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய தங்கக் குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம், புனுகு மற்றும் பன்னீர் உள்ளிட்ட நறுமண வாசனை திரவியங்கள் நிரப்பப்பட்டுத் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ தலைமையில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. மேளதாளங்கள் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க, வாசனைத் திரவியங்கள் நிரப்பப்பட்ட தங்கக் குடத்தைக் கோவில் மேல்சாந்திகள் கருவறைக்கு ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து பகவதி அம்மனுக்குத் தங்கக் குட களப அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்குத் தங்கக் கிரீடம், வைர மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் சாத்தப்பட்டுச் சந்தனகாப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு புஷ்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளி உள் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வெள்ளிச் சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த ஆடி களப அபிஷேகம் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை 12 நாட்கள் தினமும் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. விழா நிறைவாக ஆகஸ்ட் 16-ம் தேதி காலை உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாச ஹோமம் நடைபெற உள்ளது.