திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ஆடிப்பூரத் திருக்கல்யாண திருவிழா!

 

நேற்று ஆடிப்பூரத் திருவிழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிநேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரத் திருக்கல்யாணத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. 

காலையில் சிநேகவல்லியம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் ஆடிப்பூரத் திருக்கல்யாணத் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டு, புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து ராஜ மரியாதை மற்றும் நாட்டார் மரியாதை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 15 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற இந்த திருவிழாவில் தினமும் மாலையில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் திருவீதி உலா நடைபெற்றது.

நேற்று ஆடிப்பூரத்தன்று சிநேகவல்லியம்மன் தேரோட்டம், திக்கு விஜயம், சுவாமி - அம்பாள் மாலை மாற்றுதல் உற்சவம் மற்றும் தீர்த்த உற்சவம்அம்பாள் தபசு, சுவாமி ரிஷப வாகனத்தில் காட்சியளித்தல், அம்பாள் கதிர் குளிர்வித்தல் மற்றும் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும், சுவாமி - அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.