ஆடிப்பூரம்.. விநாயகருக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள்?!

 

இன்று ஆடிப்பூரம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சைவம், வைணவம் என்று எல்லா தரப்பிலும் கொண்டாடப்படுபவராக இருக்கிறார் விநாயகர். அனைத்து காரியங்களிலும் முதல் மரியாதையும், வணக்கமும் நம்ம செல்லப் பிள்ளையாருக்குத் தான். இன்று ஆடிப்பூரத்தன்று பிள்ளையாருக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால், என்ன பலன் என்று தெரிஞ்சுக்கோங்க. இன்றைய ஆடிப்பூரத்தன்று விநாயகருக்கு கஸ்தூரி மஞ்சளாலும், அன்னத்தாலும் அபிஷேகம் செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

ஒவ்வொரு அபிஷேக பொருளுக்கும் தனித்தனி சிறப்பு உண்டு. சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் விநாயகருக்கு குறிப்பாக சிறப்பித்துச் செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு எருகம் பூ மாலை, அருகம்புல் மாலை போன்றவைகளை விநாயகர் விரும்புவதைப் போல அவருக்குப் பிடித்தமான பொருட்களினால் அபிஷேகம் செய்வது சிறப்பு. எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் என தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பாலாபிஷேகம்:

வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றி பாலாபிஷேகம் செய்தால், புத்திரப் பேறு கிடைக்கும்.

தேனாபிஷேகம்:

திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பட்ட விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர். இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவத்திற்குள்ளேயே போவதை காணலாம்.

சந்தன அபிஷேகம்:

செஞ்சேரிமலை எனப்படும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். பரணி, ரோகிணி, புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவதும் சிறப்பு தரும்.

திருநீறு அபிஷேகம்:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் முன்புறம் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர், திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகிறார். அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளாலேயே அவருக்கு விபூதி, அபிஷேகம் செய்து வணங்குகின்றனர். மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்கு திருநீறு அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

மஞ்சள் அபிஷேகம்:

மிருகசீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்கு கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.

அன்ன அபிஷேகம்:

பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்தால் இல்லத்தில் வளம் கொழிக்கும்.

சொர்ணாபிஷேகம்:

திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு சொர்ணாபிஷேகம் செய்யச் செல்வம் கொழிக்கும்.