ஆடிப் பெளர்ணமி.... திருவண்ணாமலையில் 2-வது நாளாகக் கிரிவலத்தில் குவிந்த பக்தர்கள்!

 

ஆடி பௌர்ணமியை முன்னிட்டுத் திருவண்ணாமலையில் 2-வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதுடன், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஆடி மாதத்திற்கான பௌர்ணமி திதி தொடக்கம் மற்றும் நிறைவைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலை மலையைச் சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்றனர்.

முதல் நாள் இரவு மட்டுமன்றி, 2-வது நாளாக விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலையிலும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. கிரிவலப் பாதையில் பக்தர்களுக்குத் தண்ணீர், மோர் மற்றும் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டன.

கிரிவலத்தை நிறைவு செய்த பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்யக் குவிந்தனர். பொதுத் தரிசனப் பாதையான ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருந்த மக்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர், மோர், பழங்கள் மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டன.

கிரிவலம் மற்றும் தரிசனம் முடிந்து ஊர் திரும்பிய பக்தர்களால் திருவண்ணாமலை ரயில் நிலையம் மற்றும் தற்காலிகப் பேருந்து நிலையங்களில் கடும் கூட்டம் காணப்பட்டது. வேலூர் மற்றும் விழுப்புரம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளிலும் ரயில்களிலும் இடம்பிடிக்கப் பக்தர்கள் முண்டியடித்ததால் அப்பகுதிகள் பரபரப்பாகக் காணப்பட்டன.