ஆடித் திருவாதிரை... ஆக.10ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 

ஆடித் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திங்கட்கிழமை அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுப் புகழ்பெற்று விளங்கி வருகிறது.

சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோவிலில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடித் திருவாதிரை விழாவாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வந்த இச்சி சிறப்புமிக்க விழாவை அரசு விழாவாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஆடித் திருவாதிரை விழாவை பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.