திக் திக் நிமிடங்கள்: மேம்பாலத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த வேன்!
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் உள்ள கவுலேபள்ளி பகுதியில் இன்று காலை ஒரு பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மீது 10-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வேனின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறுவதை ஓட்டுநர் கவனித்தார்.
ஆபத்தை உணர்ந்த ஓட்டுநர், உடனடியாக வேனைச் சாலையோரம் நிறுத்தி, உள்ளே இருந்த பயணிகள் அனைவரையும் விரைவாகக் கீழே இறங்குமாறு எச்சரித்தார். பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய சில வினாடிகளிலேயே, வேன் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் வாகனம் முழுவதும் தீப்பிடித்தது. ஓட்டுநரின் மிகச் சரியான நேரத்திலான சமயோசித முடிவால், வேனில் இருந்த 10 பயணிகளும் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும், வேன் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. இந்த தீ விபத்து காரணமாக அந்த மேம்பாலப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு (Short Circuit) காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.