நாளை ஆவணி அவிட்டம்... பூணூல் மாற்றிக் கொள்ள உகந்த நேரம் இது தான்!
ஆவணி அவிட்டம் எனப்படும் உபாகர்ம பண்டிகை இந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்து மத பாரம்பரியத்தின்படி யஜுர்வேத பிராமணர்கள் இந்த நாளில் புதிய பூணூல் மாற்றும் புனித சடங்குகளை மேற்கொள்கின்றனர். ஆன்மீக சுத்திகரிப்பு மற்றும் வேத படிப்பின் மறுதொடக்கம் ஆகியவற்றை குறிக்கும் வகையில் இந்த நாள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நாளில் காலையில் நீராடி, மகா சங்கல்பம் செய்து ரிஷி தற்பணம் மற்றும் காமோகர்ஷித் ஜபம் ஆகியவை செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் அறியாமல் செய்த பாவங்கள் மற்றும் பிழைகளில் இருந்து விடுபட இந்த வழிபாடுகள் பெரிதும் உதவுகின்றன. இதன் தொடர்ச்சியாக மறுநாள் காயத்ரி ஜெபம் அனுசரிக்கப்படும்.
இந்த நாளில் பண்டைய முனிவர்களுக்கு ரிஷி தர்ப்பணம் செய்வது, மனிதகுலத்திற்கு வேத அறிவைப் பகிர்ந்தளித்த முனிவர்களுக்கு மரியாதையையும் நன்றியையும் காட்டும் ஒரு வழியாகும். மந்திரங்களை உச்சரித்து, பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிவிப்பது பிராமணர்களுக்கு வலிமையையும் கண்ணியத்தையும் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நாளில் காயத்ரி மந்திரத்தை ஒரு ஆயிரத்து எட்டு முறை உச்சரிப்பது, உங்களிடம் தேங்கியுள்ள பாவங்களைக் கழுவி, உங்கள் மனதைத் தூய்மைப்படுத்தும். ஆன்மீக ரீதியிலான இந்தச் சடங்குகள் மனிதர்களின் வாழ்வியலை நெறிப்படுத்தவும் மன அமைதியை வழங்கவும் பெரிதும் உதவுகின்றன.
குடும்பத்தினருடன் இணைந்து ஆற்றங்கரைகளிலும் கோயில்களிலும் இந்த வழிபாடுகள் வழக்கமாக நடைபெறுகின்றன. பண்டிகைக் காலத்தில் மேற்கொள்ளப்படும் இந்த ஆன்மீக வழிபாடுகள் மக்களிடையே ஒற்றுமையையும் நற்பண்புகளையும் வளர்க்கின்றன. இளைய தலைமுறையினர் நமது பாரம்பரியத்தை அறிந்துகொள்ள இதுபோன்ற நிகழ்வுகள் பெரிதும் உதவுகின்றன.
பூணூல் மாற்ற உகந்த நேரம்:
ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 09:05 மணி முதல் காலை 10:38 மணி வரை நல்ல நேரமாக பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் பூணூல் மாற்றுவது சிறந்ததாகும். அதே நேரத்தில் பிற்பகல் 01:42 முதல் பிற்பகல் 03:15 வரை ராகு காலமாகவும், காலை 06:01 மணி முதல் காலை 07:33 மணி வரை யமகண்டமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இந்த நேரங்களை தவிர்ப்பது நல்லதாகும்.