கோர விபத்து...லாரி மீது கார் மோதி தம்பதி உட்பட 3 பேர் பலி!

 

கேரள மாநிலம் திருச்சூர் பன்னித்தடம் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயது ஷஹீத். இவரது மனைவி 36 வயது ஷஹீனா மற்றும் உறவினர் 26 வயது ஜஹானா ஆகிய மூவரும் நேற்று ஒரு காரில் கோழிக்கோட்டில் நடந்த உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தனர். அங்கு நிகழ்வை முடித்துக் கொண்டு இரவில் மீண்டும் தங்களது சொந்த ஊருக்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு நேரத்தில் கார் மலப்புரம் தேஞ்சிப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடியது. கணநேரத்தில் நிலைதடுமாறிய அந்த கார், சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியின் பின்புறத்தில் பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து உருக்குலைந்து போனது.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும் பொதுமக்களும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காரின் இரும்புப் பாகங்களை வெட்டி மிகவும் சிரமப்பட்டு மீட்கப்பட்ட மூன்று பேரும் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ஷஹீத், ஷஹீனா, ஜஹானா ஆகிய மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.