இரு சக்கர வாகனத்தில் வேன் மோதி தந்தை, மகன் துடிதுடித்து பலி!
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த பெரியண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 63 வயது எத்திராஜ் மற்றும் அவரது 48 வயது மகன் செல்வநம்பி ஆகியோர் தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் இருவரும் இன்று காலை வழக்கம்போல் தங்களது இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரியண்டப்பட்டு பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வாகனம் பயங்கரமாக மோதியது.
எதிரே அதிவேகமாக வந்த வேன் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் உடனடியாக விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வேன் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலைப் பணிக்காக சென்ற தொழிலாளர்கள் இருவர் சாலை விபத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.