கோர விபத்து... லாரி மோதி கேரளா இளைஞர், இளம்பெண் பலி!

 

 

கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில், கேரளாவைச் சேர்ந்த அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த வினீத் என்பவர், தனது குடும்பத்தினருடன் கர்நாடகாவிற்குச் சுற்றுலா சென்றுவிட்டு கிருஷ்ணகிரி வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை குருபரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது காரின் டயர் பஞ்சர் ஆனதால், பழுது நீக்கப்பட்ட பின் அவர்கள் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி, எதிர்பாராதவிதமாக காரின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த தீபக் (28) மற்றும் அவரது சகோதரி திவ்யா (30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் ரவீந்திரன், ஸ்ரீ பார்வதி, வினீத், சரோஜினி உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டனர்.

தகவலறிந்து வந்த குருபரப்பள்ளி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கண்டெய்னர் லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா முடிந்து வீடு திரும்பியபோது நேரிட்ட இந்தச் சோகம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.