சினிமா கனவு கலைந்தது... கார் விபத்தில் இளம் நடிகர், ஒளிப்பதிவாளர் பலி ... பெரும் சோகம்!

 

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த இளம் நடிகர் பரத்காந்த் மற்றும் ஒளிப்பதிவாளர் திரிலோக் ஆகியோர், ஐதராபாத் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 10 ஆண்டுகளாகத் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு ஐதராபாத்தில் வசித்து வந்த இவர்கள், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போதுதான் மெல்ல வெற்றியைச் சுவைக்கத் தொடங்கினர். பரத்காந்த் நடித்த ‘டெனென்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தனது படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியைச் சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதற்காக இருவரும் நெல்லூர் வந்திருந்தனர். மகிழ்ச்சியான தருணங்களை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஐதராபாத் நோக்கித் தனது காரில் புறப்பட்டனர். நேற்று அதிகாலை ஐதராபாத் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது இவர்களது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கிய நிலையில், உள்ளே இருந்த பரத்காந்த் மற்றும் திரிலோக் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஐதராபாத் போலீசார், இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வளர்ந்து வரும் இளம் கலைஞர்களின் இந்தத் திடீர் மறைவு தெலுங்குத் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.