நெடுஞ்சாலையில் தவறான திசையில் வந்த கார் விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

 

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் அபத் கிராமத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மாருதி ஈகோ கார் மூலம் மெஹ்சனாவில் உள்ள கோவிலுக்குப் புறப்பட்டுள்ளனர். டெல்லி - மும்பை விரைவுச் சாலையில் சென்றபோது, ஓட்டுநர் நரேந்திரசிங் ரத்தோடு தவறுதலாக அகமதாபாத் சாலைக்கு மாறாக மும்பை நோக்கிச் செல்லும் பாதையில் காரைச் செலுத்தியுள்ளார்.

சுமார் 4 கிலோமீட்டர் தூரம் பயணித்த பின்னர் தங்களது தவறை உணர்ந்த ஓட்டுநர், சாலையின் அதே பாதையில் திடீரென யு-டர்ன் எடுத்து தவறான திசையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது லக்ஷ்மிபுரா கிராம சுங்கச்சாவடி அருகே எதிர்பாராத விதமாக எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்தக் கொடூர விபத்தில் காரை ஓட்டி வந்த நரேந்திரசிங் ரத்தோடு, கௌரி சோலங்கி, தல்பத் மேவாடா, பிரகலாத் பாரத் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த லக்ஷ்மி, தர்மிஸ்தா உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். வதோதரா தாலுகா போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.