பாலத்தில் அந்தரத்தில் தொங்கிய லாரி... சினிமாவை மிஞ்சிய விபத்து...!
கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள தேவாரா - வெலிங்க்டன் தீவை இணைக்கும் முக்கியப் பாலத்தில் இன்று பார்ப்போர் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு திக் திக் லாரி விபத்து அரங்கேறியுள்ளது. பாலத்தின் மீது அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கனரக லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து தறிகெட்டு ஓடியுள்ளது.
அப்போது எதிரே அடுத்தடுத்து வந்துகொண்டிருந்த மற்ற வாகனங்களின் மீது மோதினால் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்படும் என்பதை உணர்ந்த லாரி ஓட்டுநர், மிகச் சமயோசிதமாகச் செயல்பட்டார். மற்ற வாகனங்களைக் காப்பாற்றும் நோக்கில், பாலத்தின் பக்கவாட்டில் இருந்த பாதுகாப்புச் சுற்றுச் சுவரில் லாரியை பலமாக மோதி நிறுத்தினார். இந்த மோதலின் பயங்கர தாக்கத்தால் சுற்றுச் சுவர் உடைந்து, லாரியின் முன்பகுதி பாலத்திற்கு வெளியே காற்றில் தொங்கியது.
ஹாலிவுட் சினிமா காட்சிகளைப் மிஞ்சும் வகையில், பாலத்தின் முனையில் பாதி லாரி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பயங்கரமான சூழலில், ஓட்டுநர் அனில் குமார் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடினார். இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அசுர வேகத்தில் விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார், லாரியை பத்திரமாகப் பிணைத்து ஓட்டுநர் அனில் குமாரை சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்டனர். லாரி அந்தரத்தில் தொங்கும் இந்த விபத்து காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.