வேன் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்து... இசைக்குழுவினர் 8 பேர் பரிதாப பலி!
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள பார்லோங் கிராமத்தின் அருகே இசை நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டுப் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் ஒரு வேனில் தங்களது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு எதிரே அதிவேகமாக வந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தின் கடுமையான தாக்கத்தால் வேன் முழுமையாக நொறுங்கியதில், அதில் பயணம் செய்த ஹேமந்த் மக்தோ, மனிஷ் குமார், அனோத் குமார், சக்தி காளிந்தி, அசோக் காளிந்தி, விஷால் கர்மாலி, பவன் கர்மாலி மற்றும் பப்பு கர்மாலி ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், மீட்கப்பட்ட 8 பேரும் உடனடியாக ராம்கர் சதார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் 8 பேர் பலியான இந்தச் சம்பவம் குறித்து ராஜரப்பா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே விபத்துக்குக் காரணமான நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் நிருவாக அதிகாரிகள் பொதுமக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.